பௌத்ததேசம்
இது
புத்தர்பெருமான் ஞானம்பெற்ற
சித்திரை நாளின் சிறப்புப் பரிசு.
பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு
பௌத்ததேசம் வழங்கிய விருது.
அன்று
விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன
எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன.
பாருங்கள்
பாருங்கள்
எல்லோரும் உற்றுப் பாருங்கள்
.ஈரம் நொதிக்கும் இதயங்களே!
தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே!
எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்துகொள்ளுங்கள்.
ஏதும் அறியாமல்,
ஏன் சாகிறோமென்றும் தெரியாமல்
குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்பவிருட்சம்.
பிஞ்சை அணைத்தபடி பூவும்,
பிஞ்சை அணைத்தபடி பூவும்,
பூவைப் பிணைந்தபடி காயும்
தமிழருக்குக் காவலென்பதால் நாயும்
எரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா?
உலகமே!
இதற்கும் உன் மௌனம்தான் பதிலா?
மரங்களைத் தறியாதீர் என்பவர்களே!
இங்கு மனிதர்களைச் சரிக்கிறார்களே.
மிருகங்களை வதையாதீர் என்பவர்களே!இங்கு பிள்ளைகளைக் கொல்கிறார்களே.
ஏன் கேள்வி எழுப்பவில்லை?
எமக்கான ஆறுதலை ஏன் தரவில்லை?
ஈழத்தமிழர் சாகப் பிறந்தவர்களா?
நாயைப்போல வாழப் பிறந்தவர்களா?
அல்லைப்பிட்டி அழுகைக்கானதல்ல
அடக்குமுறை அதிகாரத்திற்கான முடிவுக்கானது.
இரத்தமும் இரத்தமும் பேசம் மொழியில்
புத்தபெருமான் போதிக்கவில்லைஆயினும்
பேரினவாதம் அதைத்தானே போதிக்கிறது.
பொறுமையின் அளவுமட்டம் பெரியதானதல்ல
சின்ன உணர்வுத் திரியில் மூளக்கூடியது.
எம்மை மூட்டாதீர்முளாசியெரிய வைக்காதீர்.
இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்
இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்
அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மௌனக்குரல்.
உலகமே!
எமக்குப் பதில்வேண்டும்
இப்போது வாருங்கள்
இல்லையெனில் எப்போதும் வரவேண்டாம்
எதற்காகவும் வரவேணடாம்.
முடியுமெனில்உங்கள் விழியில் எங்களை எடுங்கள்
இல்லையெனில் எங்கள் வழியில் எங்களை விடுங்கள்.
பாருங்கள்
உற்றுப் பாருங்கள்
அந்தச் சின்னப் பிள்ளையின் சிரசிலிருந்து
பென்னம்பெரிய நெருப்பு மூள்கிறது.தெரிகிறதா?இது தணியாதுஇனிப் பணியாது.
கவிஞர்புதுவை இரத்தினதுரை
0 Comments:
Post a Comment
<< Home